நான் பங்கு சந்தைக்கு 1990ல் நுழைந்தபோது என்னிடம் இருந்த பணம் 3500 ரூபாய். ஒரு சிறு முதலீட்டாளராக நுழைந்த நான் எத்தனையோ இடர்களை சந்திக்க நேர்ந்தது. அந்த காலக்கட்டம் அத்தகையது . பணக்காரர்கள் மட்டுமே பங்கு முதலீட்டில் ஈடுபட்டனர். வர்த்தகத்தை ஆண்ட பங்கு தரகர்கள் சிறு முதலீடு செய்வோரை ஒதுக்கியே வைத்தனர்.
 
நான்கு ஆண்டுகளுக்குப்பின் 1994ல் NSE என்கிற தேசியப்பங்கு சந்தை துவங்கியது. நேரடியாக கணினி முறையில் இயங்கிய இந்த சந்தை, வர்த்தகத்தையே மாற்றியது; கதவுகள் திறந்தன. யார் வேண்டுமானாலும், எத்தகைய சிறு தொகையையும் முதலீடு செய்யும் வாய்ப்பை இந்த சந்தை ஏற்படுத்தியது. தனியார் அமைத்த பரஸ்பர நிதிகளும் (mutual funds) இதே நேரத்தில் துவங்கின. அந்த நேரத்தில், பலரும் பங்கு முதலீட்டில் ஈடுபாடு கொண்டனர். நடுத்தர வர்கத்தினர் பலரும் பங்குகள் மூலம் தங்கள் சொத்துக்களை வளர்க்க முன்வந்தனர்.
 
என் அனுபவத்தில், பங்கு சந்தை தந்த வளர்ச்சியை வேறு எந்த சொத்துப் பிரிவும் தரவில்லை. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் சிறுகச் சிறுக சேமித்து ஒரு பெரும் தொகையை ஈட்டும் ஒரே சொத்து பங்குகள் தான். அப்படி இருந்தும் சிலரே இந்த முதலீட்டில் ஈடுபடுகின்றனர். நம்மில் பலர் பங்குகளில் முதலீடு செய்வதை சூதாட்டமாகவும், அதிர்ஷ்டம் சார்ந்ததாகவும் கருதுகின்றனர். ஆனால், உண்மை அது அல்ல.
 
இதற்கு ஒரு உதாரணம், டெம்பில்டன் நிறுவனத்தில் 1994 இல் முதலீடு செய்த 10,000 ரூபாய் இன்று 7,15,501 ரூபாய். இதில் வசதி என்னவென்றால் வெறும் 1000 ருபாய் கூட முதலீடு செய்வும் வசதியை பரஸ்பர நிதிகள் நமக்கு தருகின்றன. இன்றொரு நிகரற்ற வசதி – இந்த நிதிகளில் வரும் லாபத்தில் பத்து சதவீதம் வரி செலுத்த வேண்டும் (ஒரு லக்க்ஷத்துக்கு மேல்) . ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர் பெயரில் 5 ஆண்டுகளுக்கு ஆண்டு வருடம் 10000 ருபாய் செலுத்திவிட்டால், அந்தப் பணம் இருபது ஆண்டுகளில் ஒரு பெரும் தொகையாகும். அத்தகைய வளர்ச்சியின் வரலாறு நம் முன் நிற்கிறது. இருந்தும், நம் நடுத்தர மக்கள் இந்த அருமையான முறையைப் பயன்படுத்த தவறி விட்டனர்.
 
பரஸ்பர நிதி முதலீட்டை குறும் தொகைகளாக பல ஆண்டுகள் முதலீடு செய்ய தவறும் நம்மில் பலர், பெரும் தொகைகளை குறுகிய காலத்தில் முதலீடு செய்கிறோம். இதுவே நம் முதலீடுகள் தோல்வி காண முக்கிய காரணமாக திகழ்கிறது. இதுவே நாம் சந்தையில் இருந்து பல காலம் வெளியேறவும் செய்கிறது. நடுத்தர வர்க்கம் தன்னிலை அறிந்து, பணத்தை இழக்கா வண்ணம், சிறு தொகைகளாக, மாதந்தோறும் குறும் முதலீடுகளை செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு கடந்த இருபது ஆண்டு வரலாறே சாட்சி.
 
பொறுமை.
நெடுங்கால முதலீடு.
நல்ல திட்டத் தேர்ச்சி.
இம்மூன்றும் உங்கள் வெற்றிப்படிகள். பங்கு சந்தை பணக்காரர்களுக்கு மட்டும் அல்ல.
பொறுமைசாலிகளின் வெற்றி மேடையே நம் பங்குச்சந்தை. யாவரும் வெல்லலாம். வாருங்கள்!
– ஷியாம் சேகர்

Recent Posts

Make Your Response Count

Posted on September 26, 2020

Financial Planning in Your Forties

Posted on September 23, 2020

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Open chat